சென்னை கோயம்பேட்டில் பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு முன்பதிவு மையங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்துவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக 17 சிறப்பு முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை, கன்னியாகுமரி, சேலம், கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வரும் ஜனவரி 10 ஆம் தேதிமுதல் 15ஆம் தேதிவரை தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்து 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், பொதுமக்கள் தங்களது ஊர்களிலிருந்து சென்னை திரும்பிவருவதற்கு 16ஆம் தேதிமுதல் 18ஆம் தேதிவரை 25 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுவரை அரசுப் பேருந்துகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர். சுங்கச் சாவடியில் அரசுப் பேருந்துகள் தாமதமின்றிச் செல்வதற்கு தனிவழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்குள் குறிப்பிட்ட நேரத்தில் கனரக வாகனங்கள் வருவதற்குத் தடைசெய்யப்பட்டுள்ளதால் அதிகமான போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். மேலும், அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில் ஏதேனும் புகார்களைத் தெரிவிக்க வேண்டும் என்றால் 9445014450, 9445014436 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.
இந்திய மோட்டார் வாகன சட்டப்படி ஆம்னி பேருந்து கட்டணங்கள் குறித்து ஏதும் வழிகாட்டுதல் குறிப்பிடப்படவிலை என்பதால் அதனை முறைப்படுத்த முடியவில்லை. இருப்பினும் ஆம்னி பேருந்துகள் முறைகேட்டில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: நடராஜரின் ஆருத்ரா தரிசனம் - பாரம்பரிய அர்ச்சகர்கள் வெளியேற்றம்