சென்னை: சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்த குருசாமி (34) தனியார் ஐடி நிறுவனத்தில், சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார். நேற்றிரவு (பிப்.26) ஜாஃபர்கான் பேட்டை பகுதியில் உள்ள திரையரங்கிற்குப் படம் பார்க்கச் சென்றார். படம் முடிந்த பின் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தான் குருசாமியிடம் திருநங்கைகள் சிலர் பணத்தை பறித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், குருசாமியை அணுகிய திருநங்கைகள் சிலர் அவரை உல்லாசத்துக்கு அழைத்துள்ளனர். உடனே அவரும் சென்றுள்ளார். இதையடுத்து குருசாமியிடம் பணம் கேட்டு திருநங்கைகள் தகராறு செய்துள்ளனர். ஆனால், அவர் பணம் தர மறுத்ததால், 5க்கும் மேற்பட்ட திருநங்கைகள் குருசாமியை மிரட்டி, அவரது செல்போனை பறித்துள்ளனர். அதில் இருந்து ஜி.பே மூலம் ரூ.20,000-ஐ பறித்துவிட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பணத்தைப் பறிகொடுத்த குருசாமி அளித்த புகாரின் அடிப்படையில், தப்பியோடிய திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர். மாநகரின் பல்வேறு சாலைகளில் இரவு நேரங்களில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.