சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை அளித்துவருகின்றனர். இதுவரையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக வெற்றி பெற்ற திருநங்கை ரியா, ராசிபுரம் தனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்துள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரியா, "திருநங்கை என பெயர் வருவதற்கு காரணாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான். கலைஞர்தான் முதன் முதலில் திருநங்கைக்கு அனைத்து வகையான முக்கியத்துவம் கொடுத்தார். திமுக கட்சியால் ஈர்க்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக வெற்றி பெற்றேன்.
திமுக தலைவர் ஸ்டாலின் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெற்றேன். இதே போல் வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ராசிபுரம் தனி தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அளித்துள்ளேன். ஒடுக்கப்பட்ட சமூகம், சமுதாயத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் சமூகம் வந்து மக்கள் பணி ஆற்றுவார்களா என்ற கேள்வி உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு நிதிகளை மத்திய - மாநில அரசு சரியாக வழங்கவில்லை.
ராசிபுரம், அமைச்சர் தொகுதியாக இருந்தாலும் மக்களுடன் தொடர்பில் அவர் இல்லை. ஆனால் மக்கள் என்னுடன் எளிதில் தொடர்பு கொள்ளலாம் என்பதால் எனக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளன" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெற்றி வாகை சூடிய முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா!