உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருநங்கைகள் என்னும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனிப் பிரிவாக பிரித்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற திருநங்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், தமிழ்நாடு சமூக நலத்துறை ஆணையர் அமுதவள்ளி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி நல வாரியம் தொடங்கப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு வீட்டு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க 1.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதிச் சான்று இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக கருதி இடஒதுக்கீடு வழங்க 2017இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுக்கான 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் திருநங்கைகள் விண்ணப்பிக்கும் வகையில் 2015இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீட்டு சலுகையை வழங்கும் வகையிலும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வகை செய்யும் வகையிலும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, வழக்கின் விசாரணையை ஜூலை 17-க்கு தள்ளிவைத்தது.