சென்னை: வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் பயிற்சி மருத்துவம் மேற்கொள்ளுவதற்கான இடங்களை அதிகரிக்க கோரி, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்தரநாத், "வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் ,வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்த பின்பு, இந்திய அரசு நடத்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு இந்தியாவில் ஓராண்டு காலத்திற்கு பயிற்சி மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.
பயிற்சி மருத்துவத்திற்கான இடங்கள் குறைப்பு
அதற்குப் பிறகே,அவர்கள் மாநில மருத்துவக் கவுன்சில்களில் பதிவை பெற்று, மருத்துவராக பணியாற்ற இயலும். இந்த நிலையில் ஒன்றிய அரசு நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும், இந்தியாவில் பயிற்சி மருத்துவம் மேற்கொள்ள வாய்ப்பில்லாமல் ஏராளமான மருத்துவ மாணவர்கள் காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் ஏராளமான மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
அவர்கள் பயிற்சி மருத்துவத்தை மேற்கொள்வதற்கான இடங்களின் எண்ணிக்கை 10 விழுக்காட்டிலிருந்து 7.5 விழுக்காடாக குறைக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனைகள், பெரிய தனியார் மருத்துவமனைகளில் பயிற்சியை மேற்கொள்ள ஏற்கனவே இருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டதும் இப்பிரச்சனையை மேலும் அதிகரித்துள்ளது. இதனால், இந்த மாணவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
உக்ரைன் மாணவர்களுக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும்
வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்கள் பயிற்சி மருத்துவர்களாக பயிற்சி பெறுவதற்கான பயிற்சி மருத்துவர் இடங்களை 7.5 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக தேசிய மருத்துவ ஆணையம் உயர்த்திட வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவம் மேற்கொள்ள, ஏற்கனவே இருந்தது போல் ஒன்றிய அரசு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுரைப்படி தமிழ்நாடு அரசு, 11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு பயிற்சி மருத்துவர்களாக பயிற்சி பெற அனுமதி வழங்கிட வேண்டும்.
கரோனா காலத்தில் பல்வேறு நாடுகளில் மருத்துவப் படிப்பை , ஆன்லைன் மூலம் படித்த மாணவர்களுக்கு, கூடுதல் மருத்துவப் பயிற்சியை வழங்கி,மருத்துவர்களாக பதிவு செய்ய உரிய நடவடிக்கைகளை ஒன்றிய அரசு விரைந்து எடுக்க வேண்டும். உக்ரைன் போரில் பாதிக்கப்பட்டு திரும்பியுள்ள மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிப்பை தொடர ஒன்றிய அரசு உதவிட வேண்டும்.
ஒன்றிய அரசும், தேசிய மருத்துவ ஆணையமும் வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அவர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு கண்டு மருத்துவர்களாக உதவிட வேண்டும். மருத்துவ மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்" என தெரிவித்தார்.
600 மாணவர்கள் காத்திருப்பு
பிலிப்பைன்சில் மருத்துவம் படித்த மாணவிகள் சுபஸ்ரீ, அபூர்வா ஆகியோர் கூறும்போது, "வெளிநாட்டில் மருத்துவப்படிப்பை முடித்து விட்டு வந்தாலும், தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவப் பயிற்சி பெற முடியாமல் ஓராண்டிற்கு மேல் காத்திருக்க வேண்டி உள்ளது. பயிற்சி மருத்துவத்திற்கான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவது போல் உதவித்தொகை வழங்கப்படவில்லை. வெளிநாட்டில் மருத்துவப்படிப்பினை முடித்து விட்டு 600க்கு மேற்பட்டவர்கள் காத்திருக்கிறோம். மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பயிற்சி மேற்காெள்ளவும் தடை செய்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க:திருச்சி சிவா மகனுக்கு ஜாமீன்!