சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இரவு 7.45 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87.
சமூக சேவையைத் தொடங்கிய காலத்தில் ராமசாமி தானே முன்வந்து சென்னை, பாரிமுனையின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் காவல் துறைக்கு உதவினார். இதை அங்கீகரிக்கும் விதமாக போக்குவரத்துக் காவல்துறை இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது. டிராஃபிக் ராமசாமி அங்கு தான் உருவாகினார்.
ஊர்க்காவல் படையிலும் சில காலம் பணியாற்றினார். உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களைப் பொது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர். பிளக்ஸ் பேனர் கலாச்சாரத்துக்கு எதிரான அவரது தொடர் போராட்டம், தமிழ்நாடு முழுவதும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. உயர் நீதிமன்றங்களில் தானே வழக்கில் வாதாடும் திறமை பெற்ற இவர், கல்லூரி வாழ்க்கையை எட்டாதவர். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமானது குறிப்பிடத்தக்கது.