சென்னை: தொடர்ச்சியாக சாலை விபத்து ஏற்படும் பகுதியில் திருஷ்டி கழிக்க திருநங்கைகளை வைத்து பூசணிக்காய் உடைக்க வைத்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரின் வீடியோ வைரல் ஆன நிலையில், அவரை பணியிட மாற்றம் செய்தது காவல் துறை உத்தரவிட்டு உள்ளது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மதுரவாயல், வானகரம் ஆகிய சாலைகளில் தொடர்ச்சியாக சாலை விபத்துகள் நடைபெற்று உயிர் இழப்புகள் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக, நேற்றைய முன்தினம் (ஜூன் 8) ஒரே நாளில் இரண்டு சாலை விபத்துகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், அந்தப் பகுதிகளில் தொடர்ச்சியாக விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்வதால், அதனைத் தடுப்பதற்காக மதுரவாயல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பழனி பல வகைகளில் விபத்துகளை தடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால், எந்த முயற்சியும் பலன் தராததால் புதிய முறைகளை கையாண்டுள்ளார்.
அந்த வகையில், திருநங்கை ஒருவரை காவல் துறையின் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு விபத்து நடைபெறும் பகுதிகளில் கொண்டு சென்று பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம் பழம் ஆகியவற்றை வைத்து திருஷ்டி கழிக்கும் பணியை செய்ய வைத்தனர். இதனையடுத்து, போக்குவரத்து காவல் துறையினரின் இந்த நூதன செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது.
இதையும் படிங்க: நிதி மோசடியில் ஈடுபட்ட ஏஆர்டி நகைக்கடை உரிமையாளர்கள் கைது
குறிப்பாக, சாலைகளில் பூசணிக்காய் உடைக்கக் கூடாது என போக்குவரத்து காவல் துறையினரே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலையில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரே திருஷ்டி என்ற பெயரில் பூசணிக்காய் உடைப்பதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் இச்சம்பவம் பல கேளிக்கை மற்றும் கேள்விகளுக்கும் உள்ளானது.
இதனைத் தொடர்ந்து, இந்த செயல் காவல் துறை அதிகாரிகளுக்கு சென்ற நிலையில் பூசணிக்காய் உடைக்க வைத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் பழனியை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து, போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ‘தனிப்பட்ட நம்பிக்கையை பணியில் பயன்படுத்தி இருக்கக் கூடாது’ எனவும் விபத்து நிகழ்வதற்கான காரணங்களை ஆராய்ந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: Operation Children missing: 48 மணி நேரத்தில் 121 குழந்தைகள் மீட்பு