ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாட்களில் அசைவப் பிரியர்கள் மீன் உண்பது வழக்கம். எப்போதும் காசிமேடு பகுதியில் திருவிழா கோலம் பூண்டு அதிகாலை முதலே மீன்களை வாங்க அசைவப் பிரியர்கள் குவியத் தொடங்குவார்கள். தற்போது ஊரடங்கு காரணமாக இப்பகுதி வெறிச்சோடி வந்தநிலையில், விற்பனை இல்லாமல் கடைகள் அடைக்கப்பட்டன.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்து நாளை (மே.24) முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதனால் கடைகள் அனைத்தும் இன்று(மே.23) திறந்து இருக்கும் என அரசின் அறிவுறுத்தலின்படி, அதிகாலை முதலே சென்னை - காசிமேடு பகுதியைச் சேர்ந்த பழைய மீன்பிடி ஏலக்கூடம் அருகே, புதியதாக அமைக்கப்பட்ட மீன் மார்க்கெட்டில் விற்பனை நடைபெற்று வருகிறது. கடைகளில் வியாபாரிகள் மீன்களை ஏலம் விடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சிறு வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து மீன் வாங்க ஏதுவாக கடைகளை அமைத்துக் கொடுத்தும், ஒலிப்பெருக்கிகள் மூலம் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க, முகக் கவசங்கள் அணிய காவல் துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் எதிர்பார்த்த அளவுக்கு மீன் பிரியர்களின் கூட்டம் காசிமேடு பகுதியில் இல்லாமல் காட்சியளிக்கிறது. விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் பெரிய வகை மீன்கள் வரத்து இல்லாமல், சிறிய மீன்கள் மட்டுமே விற்பனையில் உள்ளது. ஒரு சில இடத்தில் மட்டும் பெரிய வகை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்களும் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.
ஒரே இடத்தில் மீன்களை வாங்குவதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்ததால், வாகனங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ஸ்தம்பித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: மல்யுத்த வீரரைச் சுற்றிவளைத்தத் தனிப்படை... சுஷில் குமார் கைது!