சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிற காரணத்தினால், இன்று (நவ.15) கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இதைத் தொடர்ந்து நவம்பர் 19 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் தேதி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27 - 28 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 - 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
இதைத் தொடர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருவதால், வங்க கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு பகுதிகள் குறிப்பாக நாளை (நவ.16) வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர - ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!