சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று (ஆக.21) தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாகவும் மற்றும் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு 20.08.2023 அன்றுடன் விண்ணப்பங்கள் பதியும் பணி நிறைவடைந்தது.
மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு விண்ணப்பதாரர்கள் உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவு நேற்றுடன் முடிவடைந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர், சட்டமன்ற கூட்டத் தொடரில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி 'அண்ணா பிறந்தநாள் விழா'வில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை நிறைவேற்ற உள்ளதாக அறிவித்தார். அதன்படி, முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்டு 4ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட விண்ணப்ப முகாம் ஆகஸ்டு 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலும் நடந்தது.
ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரையில் முதற்கட்டமாகவும், ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் இரண்டாம் கட்டமாகவும் நடந்த இந்த முகாமில் ஏறத்தாழ 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் புதிதாக விண்ணப்பங்களை பதிவு செய்ய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைப்பேசி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகள், விதவை, கைம்பெண்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்கள், இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பப் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அதேபோல், ஏற்கெனவே விண்ணப்பம் பெற்று பதிவு செய்ய தவறியவர்களும், தகுதி வாய்ந்த பெண்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெற்ற அதே இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பப் படிவங்கள் பெறாத குடும்ப அட்டை தாரர்கள் அவர்களுக்குரிய முகாம் நடைபெறும் இடங்களில் முகாம் பொறுப்பு அலுவலரிடம் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து அதே முகாமில் அளித்து பயனடையலாம் என அரசு தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க : வால்பாறை எஸ்டேட்டில் வணக்கம் போடும் காட்டு யானைகள் - வைரலாகும் வீடியோ!