சென்னை: சூளைமேடு சக்தி நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 46). திருமணமாகாத இவர் ஜாம்பஜார் பகுதியில் சுகுணா என்ற பெயரில் அவரது அண்ணி ஜெரினாவுடன் முட்டை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 24ஆம் தேதி) மாலை 5:45 மணி அளவில் சூளைமேட்டில் உள்ள சந்திரசேகர் வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று அவரை அடித்து காரில் ஏற்றி அழைத்து சென்றனர்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சந்திரசேகரின் அண்ணி ஜெரினா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின் சந்திரசேகரின் செல்போன் எண்ணை வைத்து நாமக்கல்லில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவரை மீட்டு, கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 31), மணி (வயது 39), பம்மல் பகுதியை சேர்ந்த முட்டை விநியோகஸ்தர் சரவணகுமார் (வயது 40) ஆகியோர் என்பது தெரிய வந்தது. கடத்தப்பட்ட சந்திரசேகர் நடத்தி வரும் முட்டை கடைக்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சரவணன் என்பவர் முட்டை விநியோகம் செய்து வந்தார்.
சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு உண்டான முட்டைகளை சரவணன் சிறுக சிறுக சந்திரசேகரனின் கடைக்கு விநியோகம் செய்து வந்த நிலையில், இரண்டு லட்ச ரூபாய் மட்டும் சரவணனுக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் மீதமுள்ள 8 லட்சம் ரூபாய் பாக்கியை சரவணன் பலமுறை சந்திரசேகரிடம் கேட்டபோது தருவதாக கூறி இழுத்தடித்து வந்துள்ளார். மேலும் சந்திரசேகர் முட்டை கடையை மூடிவிட்டு தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து சந்திரசேகரனை கடத்தி கொண்டு சென்று கடன் பாக்கி கேட்டு மிரட்டியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து சூளைமேடு போலீசார் கடத்திய மூன்று பேர் மீது கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பிடிக்கவில்லை என்று மனைவியிடம் கூறிவிட்டு கோயில் குருக்கள் தற்கொலை
சென்னை கே.கே நகர் 10வது செக்டார் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 36). இவர் கே.கே நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் குருக்களாக பணியாற்றி வந்தார். வினோத்தின் மனைவி கலைவாணி 8 மாத கர்ப்பிணியாக உள்ளதால் 10 நாட்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை வினோத் அவரது மனைவி கலைவாணியை தொடர்பு கொண்டு வாழ்வதற்கு பிடிக்கவில்லை என்று கூறி, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்ள போவதாகவும் கூறி தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் கலைவாணி உடனே உறவினர் ஒருவருக்கு தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.
அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வினோத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கே.கே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வினோத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வினோத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நுங்கு பிரச்னையின் காரணமாக எழுந்த முன்விரோதத்தால் கத்தியால் தாக்கிய நபர்கள் - தீவிர விசாரணையில் போலீஸ்!