சென்னை: சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில், இன்று (டிச.23) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில், பள்ளிகளில் சாதிய பாகுபாடு குறித்த கள ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இதனை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜா வெளியிட்டார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஆயுதங்களால் மாணவர்கள் தாக்கி கொள்வது, பல்வேறு சாதி அடையாளங்களை பயன்படுத்துவது, ஆசிரியர்களை தாக்குவது போன்றவை தொடர்ந்து நடைபெறுவதால் பள்ளிகளில் சாதிய பாகுபாடு குறித்த கள ஆய்வு நடத்த முடிவு செய்தோம்.
இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட பள்ளிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஆய்வுத் தொகுப்பை அரசிடம் ஒப்படைக்க உள்ளோம். மேலும் இந்த அறிக்கை குறித்து, ஒரு மாதத்திற்குள் அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், எந்தெந்த பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டோம் என பள்ளிகளின் பெயர்கள் வெளியிடப்படும்" என எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆய்வில் 36 மாவட்டங்களில் உள்ள 321 அரசுப் பள்ளிகள், 58 அரசு உதவிபெறும் பள்ளிகள், 62 தனியார் பள்ளிகள் என 441 பள்ளிகளைச் சேர்ந்த 333 ஆண்கள் மற்றும் 311 பெண்கள் என 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மொத்தம் 644 மாணவர்களை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. 250 பயிற்சி பெற்ற தன்னார்வ கள ஆய்வாளர்கள் கலந்து கொண்ட இந்த ஆய்வு 3 மாதங்கள் நடத்தப்பட்டது.
90 சதவீதம் பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடி இன மாணவர்கள் கலந்து கொண்டனர். 10 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்டது. இதில் 72 கேள்விகள் கேட்கப்பட்டது. அதன் மூலம், 39 வடிவங்களில் தீண்டாமை பள்ளி வளாகங்களில் உள்ளது என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்குள் நிலவுவது, மாணவர்களுக்குள் நிலவுவது, ஆசிரியர்களால் மாணவர்களுக்கு நடப்பது என பல வகைகளில் தீண்டாமை உண்டு. உணவுக் கூடத்தில் தலித் சமையலர் சமைக்க கூடாத பள்ளி, சாதி வாரியாக தனி அறைகளில் உணவு அருந்துவது நான்கு இடங்களிலும், குடிநீர் குவளைகள் இல்லாமல் 19 பள்ளிகள் உள்ளன.
ஆசிரியர்கள் இடையே தீண்டாமை பார்ப்பது மூன்று பள்ளிகளிலும், தலித் மாணவரை தொடாத பள்ளி ஒன்று, தலித் மாணவர்களுக்கு தண்டனை அதிகம் தருவது உள்ளிட்ட முடிவுகள் கிடைத்துள்ளன. 15 பள்ளிகளில் தலித் மாணவர்கள்தான் வகுப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள்.
தலித் மாணவர் முதலிடம் பிடித்ததன் காரணமாக, விழாவை ஒரு பள்ளி ரத்து செய்துள்ளது. சாதி ரீதியான அடையாளங்கள் வைத்து இருப்பது, குறிப்பாக இருசக்கர வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது, பொட்டுகள் வைப்பது, கடுக்கன் போடுவது உள்ளிட்ட 39 வடிவங்களில் சாதிய பாகுபாடு உள்ளது.
சாதிய பாகுபாடுகள் அதிகரிப்பதில் சினிமா பிரபலங்களின் முகங்களை சாதிய வரிகளோடு டி-ஷர்ட்டுகள் அணிந்து கொள்வது, வாகனங்களில் ஸ்டிக்கர்களாக ஒட்டுவது போன்றவை தொடர்கின்றன. அதேபோல் ஒரு சில பள்ளிகளில் அந்த பகுதியைச் சேர்ந்த சாதிய செல்வந்தர்களை சிறப்பு விருந்தினர்களாக பள்ளி விழாக்களுக்கு அழைத்து, அவர்களை பெருமைப்படுத்தி பேசுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
சாதிய பாகுபாடுகள் அழிவதற்கு 23 பரிந்துரைகளை அரசிற்கு வழங்கு உள்ளோம். குறிப்பாக, பள்ளிக்கூடங்களில் நிலவும் சாதிய பிரச்னைகளில் கவனம் செலுத்த, ஒரு அதிகாரியை பள்ளிக்கல்வித்துறை நியமிக்க வேண்டும். எந்த பள்ளியில் சாதிய பாகுபாடு வந்தாலும், நேரடியாகச் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமத்துவ கமிட்டிகள் வேண்டும். மாணவர்கள் புகார் அளிப்பதற்காக அனைத்து பள்ளிகளிலும் சமத்துவ புகார் பெட்டி வைக்க வேண்டும். சமத்துவ விழாக்களை நடத்த வேண்டும். பாகுபாடு கூடிய பள்ளிகள் இருப்பதுபோல், பாராட்டக் கூடிய பள்ளிகளும் உள்ளது. ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் சாதிய பாகுபாடு ஒழிப்பதற்கு முன்னெடுப்பை எடுத்தால், அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒதுக்கப்படுகிறார்கள்.
அதனால், தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து, சமத்துவ விழாக்களை மாணவர்கள் மத்தியில் நடத்த வேண்டும். மேலும் பள்ளிகளில் நடத்தபட்டு வரும் இந்த சாதிய பாகுபாடு விவகாரத்தில் அரசு தலையிட்டு, ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக போரட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் நாளை மெகா மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்