தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. உலகில் எந்த நாட்டிலும் 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பது நடைமுறையில் இல்லை. இந்தத் தேர்வு அறிவிப்பின் மூலமாக சின்னஞ்சிறு மாணவர்கள் மத்தியில் தேர்வு பயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பெரியளவில் பாதிக்கப்படுவார்கள். இடைநிற்றலும் அதிகரிக்கும். இதனால் மாநிலத்தின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படும்.
எனவேதான் கல்வியாளர்களும் உளவியல் நிபுணர்களும் இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். ஐந்தாம் வகுப்பு வரை தேர்ச்சி என்பது முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மாணவர்கள் நலன்கருதி கொண்டு வரப்பட்ட திட்டம். எட்டாம் வகுப்புவரை தேர்ச்சி என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி கொண்டு வரப்பட்ட திட்டம்.
எனவே, தமிழ்நாடு அரசு 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்னும் திட்டத்தை மாணவர்களின் நலன் கருதி உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும், 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் கூட தேர்வு மையங்களாக உள்ள அவரவர் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிவரும் நிலையில், 5, 8ஆம் வகுப்பு மாணவர்கள் அவரவர் பள்ளிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சில மாவட்டங்களில் கல்வித் துறை அலுவலர்கள் கூறுவதும், 15 கிலோ மீட்டருக்கு அப்பால் தேர்வு மையங்களை அமைப்பதும் தவறானதாகும். எனவே இதுபோன்ற நடைமுறைகளை கல்வி அலுவலர்கள் கைவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு தேர்வுக்கு தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு