தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடைபெற்றது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 41 பேரை கைது செய்துள்ளனர்.
இதில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார், தமிழ்நாடு காவல்துறையில் முதல் நிலை காவலராக வேலை செய்கிறார். இவர் குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி அடையச் செய்வதாகக்கூறி ஏழு பேரிடம் சுமார் ரூ. 40 லட்சம் வசூலித்துள்ளதாகவும், இந்தத் தேர்வில் தன் மனைவி மகாலட்சுமியை தேர்ச்சிபெற வைத்து வருவாய்த் துறையில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர விஏஓ தேர்விலும் மோசடிசெய்து தன்னுடைய இரு தம்பிகளை தேர்ச்சியடையச் செய்துள்ளார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டதால் இவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், குரூப் 2ஏ தேர்வில் காவலர் ஒருவர் மூலம் ரூ.13 லட்சம் கொடுத்து வெற்றிபெற்று, சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலைசெய்யும் ஆனந்தன் என்பவரையும், காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் இருவரும் ஜாமின் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி செல்வக்குமார், விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், தற்போது ஜாமீன் வழங்கக்கூடாது என்ற அரசின் வாதத்தை ஏற்று இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முக்கியப்புள்ளிக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்