ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான ஆறாயிரத்து 491 காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில்,
- குரூப்4 தேர்விற்கான எழுத்து தேர்வு செப்டம்பர் முதல்நாள் தமிழ்நாட்டின் 301 தாலுக்கா மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்காக 16 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
- விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in இல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
- மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் / பயனாளர் குறியீடு (Application No. / Login ID) மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
- சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், தாங்கள் தேர்வுக்கட்டணமான ரூ.100/- செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு இம்மாதம் 28ஆம் தேதிக்குள் அனுப்புமாறும் குறிப்பிட்டுள்ளனர்.
- 28ஆம் தேதிக்குப் பிறகு பெறப்படும் கோரிக்கைகளின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலோ, contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.