சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தண்டலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, கடந்த 2022ஆம் ஆண்டில், குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள 7,301 பணி இடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாட்டில் 7,689 மையங்களில் நடந்த இந்த தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதினர். நீண்ட இழுபறிக்குப் பிறகு குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவி: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
முதலில் 7,301 பணி இடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில் சுருக்கெழுத்து, தட்டச்சர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பிறவியிலேயே சர்க்கரை நோய்; தவிர்க்க ஆலோசனை கூறும் ஆய்வாளர்கள்!
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 10,219 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 15 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தேர்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வலியுறுத்திய நிலையில், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 10,219 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, கூடுதலாக 631 பேர் குரூப் 4 வேலைவாய்ப்பை பெறுவார்கள். இந்தச் செய்தி, டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இன்னும் இந்த பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: TNPSC: குரூப் 4 பணியிடங்களை 15,000-ஆக அதிகரிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்