தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்–2ல் (குரூப்–2) அடங்கிய பல்வேறு பதவிகளில் 1,338 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை 10.08.2018 அன்று வெளியிடப்பட்டு 11.11.2018 அன்று 6,26,970 விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வும், 23.02.2019 அன்று 14,797 விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டன.
எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்விற்குத் தெரிவு செய்யப்பட்ட 2,667 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்கு அனுமதிக்கப்பட்டு 06.11.2019 முதல் 30.11.2019 வரை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
நேர்முகத் தேர்வின் இறுதி நாளான இன்றைய தினமே, நேர்முகத்தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில்பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணைய அலுவலக அறிவிப்புப் பலகை, தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.
தரவரிசை அடிப்படையில் இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். மிகக்குறைவான நாட்களில் முதனிலைத்தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றை நடத்தி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: