இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '2018-19 மற்றும் 2019-20ஆம் ஆண்டுக்களுக்கான காலிப்பணியிடங்களைத் தெரிவிக்குமாறு பல்வேறு துறைத் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. மேலும் காலிப்பணியிடங்களைக் கணக்கிட்டு, வழங்கும் பணி சில துறைகளில் தாமதமானதால், அதனை பின்னாளில் சேர்த்துக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனடிப்டையில், குரூப் 4 இளநிலை உதவியாளர் பணியிடங்களில், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், கிராம நிர்வாக அலுவலர், வரித்தண்டலர், வரைவாளர் உள்ளிட்டப் பதவிகளில் 6 ஆயிரத்து 491 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எனவே, குரூப் 4 அறிவிப்பின் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைத் தோராயமானது என்று தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் 6 ஆயிரத்து 491 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள், மதிப்பெண் பட்டியல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்காலிகமாக தகுதி பெற்றவர்கள் டிசம்பர் 5ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி, கூடுதலாக 2 ஆயிரத்து 907 பணியிடங்கள் சேர்த்து மொத்தம் 9 ஆயிரத்து 398 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது கூடுதலாக 484 காலிப்பணியிடங்கள் பெறப்பட்டுள்ளதால், அத்துடன் சேர்த்து மொத்தம் 9 ஆயிரத்து 882 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எனவே, தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள 9 ஆயிரத்து 882 காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம்