சென்னை: தலைமைச்செயலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு (TNHPS) அடிப்படை ஆய்விற்கு முந்தைய ஆய்வின் (2018-19) சுருக்க அறிக்கையை நேற்று(அக்.11) வெளியிட்டார்.
இச்சுருக்க அறிக்கையும் மற்றும் அது தொடர்பான கொள்கைச் சுருக்க சிற்றேடுகளும் அடிப்படை ஆய்விற்கு முந்தைய ஆய்வின் (PBS) முக்கிய கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்தி பல்வேறு சமூக-பொருளாதார குறியீடுகளின் விரிவான கண்ணோட்டத்தையும் வழங்கும்.
தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு (TNHPS) தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களின் சமூக-பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றத்தை ஆய்வு செய்வதற்காக மாநிலத்தில் உள்ள குடும்பங்களில் சிலவற்றை மாதிரியாகக் கொண்டு (Sample Households) குறிப்பிட்ட இடைவெளிகளில் கணக்கெடுப்பதாகும்.
அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளால் தமிழ்நாட்டில் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகம் ஆகியவை எவ்வாறு மாற்றம் பெறுகின்றன என்பதை தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு(TNHPS) பகுப்பாய்வு செய்கிறது. இந்த சமூக-பொருளாதார மாற்றங்களைப் புரிந்து கொள்வது, வரும் ஆண்டுகளில் மாநிலத்தில் ஆதார அடிப்படையிலான கொள்கை முடிவுகளுக்குப் பயனுள்ளதாக அமையும்.
அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு, அறிவியல் பூர்வமாக சேகரிக்கப்பட்டு, அவ்வப்போது சரிபார்க்கப்பட்ட தரவுகள் மற்றும் தரவுகளின் விளக்கங்கள் தேவைப்படுகின்றன. தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு (TNHPS) இத்தகைய குறிப்பிட்ட சமூக-பொருளாதார வளர்ச்சி குறியீடுகள் மற்றும் இந்த குறியீடுகளின் முக்கியத்துவத்தின் மீதான தரவுகளை வழங்குகின்றது.
குறிப்பிட்ட கால இடைவெளிகளுடன் சேகரிக்கப்பட்ட தரவுகளானது அரசாங்கத்தின் நோக்கங்களாக இருக்கும் உயர்தரமான தரவுகளைச்சேகரிப்பது மற்றும் தரவுகளை மையமாக வைத்து ஆளுகை மேற்கொள்வது ஆகியவற்றை வலுப்படுத்த உதவும்.
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமானது (MIDS), மாநிலத்தின் பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை (DoES) மற்றும் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள கணக்கெடுப்பு ஆராய்ச்சி மையம் (SRC) ஆகியவற்றுடன் இணைந்து, தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு (TNHPS) அடிப்படை ஆய்விற்கு முந்தைய ஆய்வினை (PBS) மேற்கொண்டது.
தரவு சேகரிக்க, கண்காணிக்க மற்றும் பகுப்பாய்வு செய்ய கணிப்பொறி உதவியுடன் தனிப்பட்ட நேர்காணல் (Computer Assisted Personal Interview - CAPI) என்ற தரவு சேகரிப்பு வடிவமைப்பு பயன்படுத்தப்பட்டது.
மாநிலத்தில் மாதிரி ஆய்வுகளை மேற்கொள்ளும் திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட இந்த கணக்கெடுப்பு பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை (DoES) களப்பணியாளர்கள் மூலமாக குடும்பங்களிடமிருந்து மக்கள்தொகை மற்றும் சமூக-பொருளாதாரத் தரவுகளைச் சேகரித்தது.
2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் (Census 2021) தாமதத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தின் சமீபத்திய மக்கள் தொகை அம்சங்களையும் மதிப்பிடுவதற்கான வாய்ப்பை அடிப்படை ஆய்விற்கு முந்தைய ஆய்வின் தரவுகள் (PBS) வழங்குகின்றன.
தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பின் (TNHPS) அடிப்படை ஆய்விற்கு முந்தைய ஆய்வு (PBS), மாநிலம் எவ்வாறு வளர்ச்சியடைந்து வருகிறது என்பதற்கு முன்னோடியாக, 2018-19ல் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட அடிப்படை ஆய்விற்கு முந்தைய ஆய்வு (PBS), 2,12,282 குடும்பங்களிலிருந்து பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தின் ஒரு வலுவான தரவுத்தளத்தை வழங்குகிறது.
மக்கள்தொகை மற்றும் சமூக-பொருளாதார குறியீடுகளான கல்வி, வேலைவாய்ப்பு, விவசாய நிலம் மற்றும் சொத்து உரிமை, குடும்ப அட்டை உரிமை, குடும்ப வருமானம் மற்றும் சுகாதாரம், மின்சாரம், தண்ணீர், சமையல் எரிபொருள் மற்றும் வீட்டுவசதி போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீதான ஆய்வுகளை அடிப்படை ஆய்விற்கு முந்தைய ஆய்வு (PBS) உள்ளடக்கியது.
இக்கணக்கெடுப்பானது, சராசரி வருமானம், மாவட்ட வளர்ச்சி குறியீடுகளிடையே உள்ள ஒப்புநோக்கு தொடர்பான தகவல்களை அளிப்பதன் மூலம் அரசு நிதி ஒதுக்கீடுகள் குறித்த முடிவுகள் எடுப்பது, தொழிலாளர் பங்கேற்பு, வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், சேவை வழங்கல் பற்றிய சரிபார்க்கப்பட்ட தரவுகளையும் வழங்குகிறது.
2018-19இல் அடிப்படை ஆய்விற்கு முந்தைய ஆய்வை (PBS) கொண்டு தொடங்கிய தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு (TNHPS) ஆனது, 2022-இல் அடிப்படை ஆய்வு மற்றும் அடுத்தடுத்த தொடர் ஆய்வுகள், மாநிலத்தில் உள்ள குடும்பங்களின் சமூக மற்றும் பொருளாதார களங்களில் ஏற்படும் மாற்றங்களை தொடர் ஆய்வு செய்து வருகிறது.