தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் என்ற புதிய பதவி 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் உருவாக்கப்பட்டது. அப்போது கேங்மேன் பதவிக்கு 5000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அதன் பிறகு கேங்மேன் பயிற்சி, சீனியர் கேங்மேன், சீஃப்கேங் மேன் என்ற பதவி உயர்வுகள் அவர்களுக்கு பணிக்காலத்தில் வழங்கப்படும் என்றும் மின்சார வாரிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு 2019 மார்ச் மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. மாதம் 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் 5000 பேர் நியமனம் செய்யப்படுவார்கள், இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்கு பின்னர் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு 5ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாத காரணத்தினால் 5000 என்ற கேங்மேன் பதவிகளை 10 ஆயிரமாக உயர்த்தி மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தார். அதன் அடிப்படையில் மின்சார வாரியத்தின் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.
கேங்மேன் பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று வாரியம் அறிவித்தது. இதற்கு சுமார் 53 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு 2019 நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 40 இடங்களில் முதற்கட்ட உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் 23 ஆயிரம் பேர் தகுதி பெற்றனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் 15 ஆயிரம் பேர் கேங்மேன் பணிக்கு தகுதி பெற்றனர்.
தகுதி பெற்றவர்கள் பட்டியல் மின்சார வாரியத்தால் 2020 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் பணி நியமன உத்தரவு அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் கேங்மேன் பணிக்கு தகுதி பெற்றும் பல மாதங்களாக காத்திருப்பதாக தினக்கூலியாக பணியாற்றிவரும் மின்சார வாரியத் தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயர் அலுவலரிடம் நாம் கேட்கும்போது, "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தற்பொழுது எதுவும் நடைபெறவில்லை. ஏற்கெனவே நடைபெற்ற தேர்வு குறித்து தலைமைப்பொறியாளரிடம் (பணியாளர்) தான் கேட்க வேண்டும். கேங்மேன் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு வாய்ப்புகள் இல்லை எனக் கூறினார்.
இதையும் படிங்க: கேங்மேன் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு - விசாரணைக்கு உத்தரவு!