இது குறித்து பொறியியில் துறை சார்பில் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த படிப்புகளில் சேர 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதையடுத்து பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 46 மையங்களில் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் மொத்த மாணவர்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 672 மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று காலை 10.30 மணிக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியிடுகிறார். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 25ஆம் தேதி கலந்தாய்வும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 26ஆம் தேதியும், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 27ஆம் தேதியும் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்தப் பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில், மாணவர்களுக்கு நேரடியாக அழைத்து விடுத்து நடத்தப்படும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூலை 3ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் நடத்தப்பட உள்ளது” என கூறப்பட்டுள்ளது.