தமிழ்நாட்டில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் திமுக மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் அதிமுக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து பேசிய தயாநிதிமாறன், திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தைக்கூட அதிமுகவினர் எட்டு ஆண்டுகளாக விரிவாக்கம் செய்யவில்லை எனவும், மக்களுக்குக் கொடுக்க தண்ணீர் இல்லாதபோது மது ஆலைகளுக்கு மட்டும் எப்படி தண்ணீர் கொடுக்க முடிகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழ்நாட்டில் இத்தனை நாட்களாக தண்ணீர் பஞ்சம் இருப்பது அதிமுகவுக்கு தெரியவில்லையா என்றும், தூங்கி எழுந்து நேற்று மழை பெய்யவில்லை என்றும் கூறுவதாகக் கூறினார். அதுமட்டுமின்றி தண்ணீர் பற்றாக்குறை இல்லை என கூறிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்தார்.