சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக பல இடங்களுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த மின்சார ரயில்களில் அரசு, தனியார் ஊழியர்கள், மாணவ-மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் பயணம் செய்துவருகின்றனர். இந்த மார்க்கத்தில் நான்கு ரயில் பாதைகளில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் பாதைகளாகவும், இரண்டு மின்சார ரயில் பாதைகளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், 135 மின்சார ரயில் சேவைகளும், 50க்கு மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இதனால் சென்னை- அரக்கோணம் ரயில் மார்க்கம் எப்போதும் பரப்பரப்பாக காணப்படும். இந்நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், இந்த வழித்தட முழுவதிலும ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இதனால், அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகளில் சிலர் ரயிலில் இருந்து இறங்கி பேருந்துகள் மூலமாக வீடுகளுக்கு சென்றனர். இது குறித்து, தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போராடி சிக்னல் கோளாறை சரி செய்தனர். பின்னர் , ஆங்காங்கே நடு வழியில் நின்ற மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இதன்காரணமாக வேலை முடிந்து தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்