தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்புகளில் 15 விழுக்காடு இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 விழுக்காடு இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு அரசு, அதிமுக, திமுக, திக, பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்டவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலை கருதி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் தீர்ப்பளித்தது. அதில், மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து அந்தக் குழுவில் தமிழ்நாடு அரசின் மூத்த ஐஏஎஸ் அலுவலரும், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநருமான உமாநாத்தை நியமனம்செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க...சென்னை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க குழு அமைப்பு!