சென்னை: தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரலாம் என மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசின் தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதிமுதல் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் விருப்பத்தின்பேரில் பள்ளிகளுக்கு வந்து சந்தேகங்களைக் கேட்டறிந்து செல்லலாம்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து மாணவர்கள் வருவதற்கு அனுமதி கிடையாது. பள்ளிகளில் 50 விழுக்காடு ஆசிரியர்கள், வருகைபுரிந்த மாணவர்களுக்கு சந்தேகங்களைத் தெரிவிக்கலாம்.
பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களை வகுப்பு வாரியாக இரண்டு பிரிவாகப் பிரிக்க வேண்டும். ஒருநாளில் ஒரு பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது.
ஒரு பிரிவு மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் வருவதற்கும், மற்றொரு பிரிவு மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை ஆகிய நாள்களில் வருவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆசிரியர்களும் இரண்டு பிரிவாகப் பிரிந்து 22 நாள்கள் பணியாற்ற வேண்டும். ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசு 50 விழுக்காடு ஆசிரியர்கள், ஆசிரியர் பணியாளர்களுடன் செப்டம்பர் 21ஆம் தேதிமுதல் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதிக்கலாம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே!' - அவசர சட்டம் இயற்ற பாமக வலியுறுத்தல்!