சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை மற்றும் கனமழைக்கு வாய்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறியதாவது, "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேப்போல் நாளை கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் வானிலை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீன்வர்களுக்கு எச்சரிக்கை: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இந்த பகுதிகளுக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.
மழை அளவு: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஊத்துக்கோட்டையில் 6 செ.மீ, பொன்னேரி 5 செ.மீ, கத்திவாக்கம் 4 செ.மீ, பந்தலூர் தாலுகா அலுவலகம், கும்மிடிப்பூண்டி, அரிமளம், மேட்டூர், சின்னக்கல்லார், தாமரைப்பாக்கம் தலா 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதேபோல் குண்டேரிப்பள்ளம், வொர்த் எஸ்டேட் செருமுல்லி, புழல் ARG, ஈச்சன்விடுதி, திருவள்ளூர், அவலாஞ்சி, விராலிமலை, சோழவரம், Rscl-2 நெமூர், மணலி, புழல் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது” என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தென்காசி கடையநல்லூர் பகுதியில் என்ஐஏ தீவிர சோதனை!