சென்னை: கிர்கிஸ்தான் நாட்டில் ஐரோப்பிய பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக தமிழ்நாட்டின் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் பங்கேற்றார். இதில் அவர் 90 கிலோ எடை பிரிவில் பங்கேற்று இந்தியாவிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்து உள்ளார்.
மேலும் ஆதர்ஷ் சிறந்த பளு தூக்குபவர் என்ற பிரிவில் சில்வர் கோப்பையும் பெற்று சாதனை படைத்து உள்ளார். இதனையடுத்து சென்னை வந்த ஆதர்ஷை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவரது பெற்றோர், பயிற்சியாளர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் இந்தியாவிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற ஆதர்ஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இதையும் படிங்க: நெதர்லாந்தில் ஓட்டல் திறந்த ரெய்னா... இவர் மட்டுமல்ல இன்னும் நிறைய பேர் இருக்காங்க!
அப்போது பேசிய ஆதர்ஷ், “கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஐரோப்பிய பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று உள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு முதலில் எனக்கு உறுதுணையாக இருந்த எனது பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
போட்டி மிகவும் கடினமாகத்தான் இருந்தது. சிறந்த பளு தூக்குபவர் என்ற பிரிவில் வெள்ளிக் கோப்பையும் வென்று உள்ளேன். தனியார் கூட்டமைப்பு எனக்கு தேவையான உதவிகளை செய்தனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார். மேலும் பேசிய அவர், இந்த வெற்றியைத் தொடர்ந்து மேலும் ஆசியா மற்றும் உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கங்களை வாங்க வேண்டும்.
மேலும், பளு தூக்கும் வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்தால் அது அவர்களுக்கு ஊக்கமாக அமையும். தமிழ்நாடு அரசு பளு தூக்கும் வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். அது இனிமேல் வளர்ந்து வரும் பளு தூக்கும் வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: CWC23: சொந்த மண்ணில் மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா... வெற்றிநடை தொடருமா?