சென்னை: அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (மார்ச் 16) தொடங்கிவைத்தனர்.
அந்நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பு அவர்களின் பெற்றோர் சம்மதத்துடன்தான் தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் அசோக் நகர் பள்ளியில் 100 மாணவிகளுக்கு பெற்றோர் அனுமதியுடன் தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி செலுத்துவதால் எந்தவித பாதிப்பும் இல்லை.
தமிழ்நாட்டில் 12-14 வயதில் 21 லட்சத்து 21 ஆயிரம் சிறார்கள் உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் 90 விழுக்காடு அளவிற்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 21 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. 60 வயது மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சமூக நீதிக்கு மீண்டும் கிடைத்த வெற்றி
நடிகர் விவேக் மரணத்திற்கு பிறகு தடுப்பூசி போடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டாலும், அதன்பிறகு தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 92 விழுக்காட்டினர் முதல் தவணையும், 75 விழுக்காட்டினர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
மருத்துவ உயர் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசாணையை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடினர், ஆனால் இட ஒதுக்கீடு அரசாணை செல்லும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது, தமிழ்நாட்டின் சமூக நீதிக்கு மீண்டும் கிடைத்துள்ள வெற்றி. மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
நீட் விலக்கு சட்ட மசோதா தொர்பாக நேற்று (மார்ச் 15) ஆளுநரை சந்தித்தோம். ஏற்கனவே, சித்தா மருத்துவ கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்ற ஆளுநரிடம் கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து உள்ளார். விரைவில் சித்தா பல்கலைக்கழகத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்" என்றார்.
இதையும் படிங்க: 'ஒரே நாடு... ஒரே ரேசன்... தமிழ்நாட்டுக்குப் பாதிப்பு' - மக்களவையில் குரல் எழுப்பிய கனிமொழி