முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மெரினா கடற்கரையில் இருக்கும் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அமைந்திருக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்தை 27.1.2021 புதன் கிழமை காலை 11.00 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திறந்து வைக்க உள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ . பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் அன்றைய தினம்தான் சசிகலா விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.