சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. தற்போது, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது
இந்நிலையில், இன்று அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசும் பொழுது , "அதிமுக ஆட்சியில் தொடங்கிய 11 மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய நிலை என்ன, மாணவர் சேர்க்கை எப்போது?" என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், "அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் வந்ததாகச் சொல்லுகின்றனர். ஆனால், 2011ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்வாக ஒப்புதல், இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதன்பிறகுதான் ஆட்சி மாற்றம் நடந்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் 11 மருத்துவக் கல்லூரிகளும் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 3 மாதங்களில் 11 மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். இது தொடர்பாக ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம்.
ஒரு கல்லூரிக்கு 150 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த ஆண்டே 1,650 மாணவர்களின் சேர்க்கைக்கு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: ஒரு வாரம் முன்னதாக முடிவடைகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!