சென்னை: கல்லூரிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் கவுர விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆண்டிற்கு 11 மாதத்திற்கு தலா 20,000 தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா தொற்று 2ஆம் அலை தற்போது குறைந்து வருகிறது. மேலும், நடப்பு கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கைப் பணிகளும் நடைபெற உள்ளன. கரோனா தொற்றின் 3ஆவது அலையின் அடிப்படையில் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிகிறது.
அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் பணியாற்றுவதற்காக 2,300 விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது, ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களில் பணியாற்றுவதற்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் தேவை அதிகரித்துள்ளது என அரசுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் கடிதம் எழுதியுள்ளது.
ஏற்கனவே உயர் கல்வித்துறையால் 2,423 கவுர விரிவுரையாளர்கள் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், 150 கல்லூரிகளில் பணியாற்ற கூடுதலாக 1,020 கௌரவ விரிவுரையாளர்கள் தேவை என குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், 2,423 பேருடன் கூடுதலாக 1,020 சேர்த்து மொத்தம் 3,443 கௌரவ விரிவுரையாளர்களை நடப்பு கல்வியாண்டில் பணியமர்த்த கூடுதலாக தேவைப்படும் நிதி குறித்து விரங்களை அனுப்ப வேண்டும் எனக் கல்லூரி கல்வி இயக்குனரிடம் உயர்கல்வித்துறை கேட்டுள்ளது.
இதையும் படிங்க: கூடங்குளம் அணுமின் நிலைய வேலை வாய்ப்பு: உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை