சென்னையில் ஊரடங்கை நூறு விழுக்காடு தீவிரப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை. நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறோம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து நேற்று கேள்வி எழுப்பியிருந்தது. நீதிபதிகள் வினீத்கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு முன்பு இன்று அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர். ராஜகோபால் ஆஜராகி பதிலளித்தார்.
அதில், "இ-பாஸ் நிறுத்தப்பட்டுள்ளது என்பது வதந்தி. இ-பாஸ் வழங்கப்படுவது நிறுத்தப்படவில்லை. மருத்துவ வல்லுநர் குழு அறிக்கை அடிப்படையில் அவ்வப்பொழுது முடிவெடுத்துவருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை தீவிரப்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கு திங்கள்கிழமை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர்.