சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் கடந்த ஒராண்டாக காலியாக இருந்தது. மேலும், கடந்த மாதம் காலியான சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியும் காலியானது.
இந்தப் பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்ற ஆளுநரின் நிபந்தனையால், துணைவேந்தர் நியமனத்திற்கான குழு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள்படி மாநில பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க பல்கலைக்கழக விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது எனவும், யுஜிசி சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை என ஏற்கனவே ஆளுநர் மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே தற்பொழுது இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்முறையாக பல்கலைக்கழக மானியக்குழுவின் உறுப்பினர் ஒருவரும் சேர்த்து நியமனம் செய்து செப்டம்பர் 6ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உயர் கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான பொன்முடி மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டாா்.
அதில், “தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகங்களுக்கென தனித்தனியே சட்டம் மற்றும் விதிகள் உள்ளன. இவற்றின்படி துணைவேந்தரின் பதவிக்காலம் முடிந்தவுடன் அதனை நிரப்ப தேடுதல் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்.
உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக சட்டவிதிகளில், ஆளுநர், துணை வேந்தரை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவினை அமைக்க வழிமுறை இல்லை. இதுவரையில் எந்த ஒரு ஆளுநரும் தன்னிச்சையாக தேடுதல் குழுவினை அமைத்ததில்லை. அதற்கு விதிகளில் வழிவகையும் இல்லை. தேர்வுக்குழு குறித்த விபரங்களை அரசுதான் அரசிதழில் வெளியிடும்.
இதுநாள் வரையிலும் தேடுதல் குழு உறுப்பினர்கள், அந்தந்த பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிட்டு, அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது ஆளுநர், நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிராக தேடுதல் குழுவை தன்னிச்சையாக முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள இந்த தேடுதல் குழு முழுக்க முழுக்க பல்கலைக்கழகச் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானது. அரசின் அலுவல் விதிகளின்படி, அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். ஆனால் ஆளுநர் தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டது, மரபு மற்றும் விதிகளுக்கு முரணானது.
பல்கலைக்கழக துணைவேந்தரை தெரிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு அளிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா சட்டமன்ற பேரவையில் 25.4.2022 அன்று நிறைவேற்றப்பட்டு, 28.4.2022 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது நாள்வரையில் மேற்படி மசோதாவிற்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெறப்படவில்லை.
ஆளுநர் தன்னிச்சையாக பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைத்து வெளியிடப்பட்ட அறிக்கையினை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும்” என தெரிவித்திருந்தார்.
முன்னதாக, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுல் குழுவை அமைைத்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை செப்டம்பர் 6ஆம் தேதி www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டது. இதன்படி, துணைவேந்தர் தேடுதல் குழுவில் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநரின் பிரிதிநியாகவும், குழுவின் தலைவராகவும் கர்நாடக மத்தியப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சத்தியநாராயணா, சிண்டிக்கேட் உறுப்பினராக மாநிலத் திடடக்குழுவின் உறுப்பினர் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனப்பந்து, செனட் உறுப்பினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜெகதீசன், பல்கலைக் கழக மானியக்குழுவின் உறப்பினராக தெற்கு பீகார் மத்தியப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் HCS ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துணைவேந்தர் நியமனம் செய்தவதற்கான 3 பேர் பட்டியலை இவர்கள் தேர்வுச் செய்து அளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திக் அரசிதழில் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு ஆளுநரின் பிரிதிநியாகவும், குழுவின் தலைவராகவும் கர்நாடக மத்தியப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சத்தியநாராயணா, சிண்டிக்கேட் உறுப்பினராக மாநிலத் திடடக்குழுவின் உறுப்பினர் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனப்பந்து, செனட் உறுப்பினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜெகதீசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்கள் சென்னை பல்கலைக்கழகத்திற்கான புதிய துணைவேந்தரை தேர்வு செய்து 3 பேர் கொண்ட பட்டியலையும், அவர்களின் விபரங்களையும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்கிற முறையில் தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைப்பார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "ஆளுநரும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும்" - UGC முன்னாள் துணை தலைவர் சிறப்பு பேட்டி!