சென்னை: பெற்றோரின் குடும்பக் கட்டுப்பாட்டுக்கான வயது வரம்பை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயனடையும் பயனாளிகள் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைந்து வருகிறது.
பெண் கல்வியை ஊக்கப்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களை கொண்ட இத்திட்டத்தால், கல்வி நிலை உயர்ந்து தாமதமாக திருமணம் நடைபெறுகிறது. ஆகையால் பெற்றோரில் ஒருவர் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வயது அதிகமாகிறது.
வயது வரம்பு உயர்வு அவசியம்
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட தகுதிகளுள் ஒன்றாக பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருத்தல் வேண்டும் எனக் கட்டுப்பாடு உள்ளது. இந்த வயது வரம்பினை 35-இல் இருந்து 40ஆக உயர்த்துதல் அவசியமாகிறது.
செப்டம்பர் 1ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் வைத்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளுள் ஒன்றான வயது வரம்பு உயர்த்தப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளிக்கு சென்னையில் இருந்து 16,000 பேருந்துகள்!