சென்னை: இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்ட அரசாணையில், குடியிருப்பு ஆக்கிரமிப்பை ஒழுங்குபடுத்துவதற்காக 2019ஆம் ஆண்டு சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு அங்கு வீட்டு மனைப்பட்டா வழங்கவும், ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அவர்களுக்கு மாற்று அரசு நிலம் அல்லது தனியார் நிலத்தை வாங்கி அங்கு வீட்டுமனைப் பட்டா வழங்கவும் அத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 572 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை ஒழுங்குபடுத்தவும், வீட்டுமனைப் பட்டா வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 923 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களை இடம் மாற்றுவதற்காக, வேறு புறம்போக்கு நிலத்தை அடையாளம் காண்பது மற்றும் தனியார் நிலத்தை வாங்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி கொண்டுவரப்பட்ட இந்த சிறப்புத் திட்டம் ஒரு ஆண்டுக்கு மட்டுமே அமல்படுத்தக் கூடியதாகும். கரோனா பரவல் காரணமாக அந்தத் திட்டம் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் ஒரு ஆண்டுக்கு, அதாவது 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்தத் திட்டத்தை நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், கரோனா தொற்று பரவல், சட்டசபை தேர்தல் போன்ற காரணங்களால் அந்த சிறப்பு திட்டத்தை திறம்பட செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. எனவே ஏழைகள் பலனடையும் வகையில், அதை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்புச் செய்ய வேண்டும் என்று அரசுக்கு நில நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.
2022 ஆகஸ்ட் வரை ஏழைகளின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக ஆணையர் கேட்டுக்கொண்டபடி இந்தத் திட்டத்தை இந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதியில் இருந்து 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதிவரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் - ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்!