சென்னை: குன்றத்தூரில் கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வரும், சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி(CIT) கல்வி குழுமத்தின் 9ஆவது பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அரசின் கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சார்கர், 593 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுபாஷ் சர்கார், "கல்வி என்பது வாழ்க்கைக்கும், சமுதாயத்திலும், நாட்டிலும் உள்ள சவால்களை தீர்த்து வைக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் தேசிய கல்விக் கொள்கை மாணவர்களின் கல்வி ஆற்றலில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது, அனைவருக்கும் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்களின் திறன் வளர்ச்சி பெருக்குவதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இலவசமாக இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சிகள் அளித்து வருகிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "எந்த ஒரு தனியார் நிறுவனமாக இருந்தாலும், அவற்றிற்கு ஊக்கமளிக்கும் வகையில் குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில் கடன் உதவிகள் வழங்கி வருகிறோம். தற்போதைய சூழலில் பல்வேறு பட்டப் படிப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது அதற்கான கற்பித்தல் தகுதியை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு தனி பயிற்சி அளிக்கப்படுகிறது தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அங்கமே இதுதான் என்றார்.
மேலும், தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை, அதற்கான கடிதம் என்னிடம் உள்ளது அதை நான் காண்பிக்க தயார், ஆனால் அவற்றில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். தேசிய கல்விக் கொள்கைக்கான வரையறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன அது மாநில அரசிடம் வழங்கி அதன் பின்னர் தான் இறுதி கட்ட வரையறை முடிவு செய்யப்படும்.
தேசிய கல்விக் கொள்கை என்பது வருங்கால இந்தியாவான இளம் தலைமுறைக்கு கல்வியில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டமாகும், அவர்களின் உயர் கல்விக்கு இது ஒரு மிகுந்த உத்வேகத்தை அளிக்கும். நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கம் என்பது ஒரு அரசியல் நிகழ்ச்சி, அவர்களும் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி கொண்டுதான் இருக்கிறார்கள்.
மத்திய அரசு ஜல் ஜீவன், உஜ்வாலா யோஜனா, ஆயுஷ்மான், பிரதான் மந்திரி யோஜனா போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, மாநில அரசு ஒன்றிய அரசு உடன் ஒருங்கிணைத்து செயல்பட்டால் தான் ஏழை எளிய மக்களுக்கு இதுபோன்ற திட்டங்களின் பயன் முழுமையாக சென்று அடைய முடியும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஆரோக்கிய மந்திர்' ஆகும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்கள்..! திடீர் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு!