மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர், அனைத்து மாநில கல்வித் துறை செயலருக்கும் ஆகஸ்ட் 24ஆம் தேதி கடிதம் அனுப்பி இருந்தார். அதில் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் ஆகியோர் தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துக்களை இணையதளம் மூலமாக தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் கு.தியாகராஜன் பேசுகையில், '' கரோனா தொற்று காலத்தில் மனித உயிர்கள் மடிந்துகொண்டு இருக்கும் காலத்தில் அவசர அவசரமாக தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு துடிப்பது ஏன் ?. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தாமல் மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயல்வதை ஏற்க முடியாது.
மத்திய அரசு நேரடியாக மாநில அரசின் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பது என்பது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல். வருங்கால தலைமுறை, நாட்டுநலன் சார்ந்த தேசிய கல்விக் கொள்கையை பற்றி அவசர அவசரமாக ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பது என்பது ஏதோ நடைமுறைக்காக கேட்பதுபோல் தோன்றுகிறது.
இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இந்த கல்விக்கொள்கை வெளியிடப்பட்டது. அதேபோல் மீண்டும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பது கண்டனத்திற்குறியது, இதற்கு முதலமைச்சர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு தேசிய கல்விக்கொள்கை 2020 சார்ந்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உடனடியாக தெரிவிக்கவேண்டும்.
பல்வேறு முரண்பாடுகளை கொண்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஒருவேளை மத்திய அரசு இதே வடிவில் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் தமிழ்நாடு முமுவதும் பெரும்பான்மையான ஆசிரியர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் சார் நீங்க வேறலெவல் சார் - பொங்கி எழுந்த பொறியியல் மாணவர்!