சென்னை, தமிழ்நாட்டில் 10 அல்லது அதற்கு மேல் பணியாளர்களைக் கொண்ட வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்து அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக, வணிக நிறுவனங்கள், கடைகள் 24 மணிநேரமும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ’தமிழ்நாடு ஆளுநர், பொது நலன்களுக்காக, 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு, துணைப்பிரிவு விதிகளில் இருந்து விலக்கு அளித்துள்ளார். 05.06.2022 முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு, ஆண்டின் அனைத்து நாட்களிலும் 24x7 கடை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும் வெளியிடப்பட்ட அரசாணையில் சில நிபந்தனைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை, ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி அடிப்படையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும், மேலும் ஒவ்வொரு பணியாளரின் விவரங்களும் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவன விதிகள், 1948 இல் சேர்க்கப்பட்ட படிவ Sஇல் வழங்கப்பட வேண்டும்.
பெண் ஊழியர்கள் எந்த நாளிலும் இரவு 8.00 மணிக்கு மேல் வேலை செய்யத்தேவையில்லை, பெண் ஊழியர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற்ற பிறகு, வேலை வழங்குபவர் அவர்களை இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். அவர்களின் கண்ணியம், கௌரவம் மற்றும் பாதுகாப்பிற்குப் போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும்.
ஷிஃப்ட்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு, போக்குவரத்து வசதிகள் இருப்பதைக் குறிக்கும் வகையில், நிறுவனத்தின் பிரதான நுழைவுவாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிபந்தனைகள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அரசின் புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு.. அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..