தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவைக்கான தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைப்பெற்றது. வழக்கம்போல் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடித்தது.
இதற்கிடையில் கரோனா நெருக்கடி காலம் என்பதால் கரோனா பாதிப்பாளர்கள் வாக்களிக்கும் பொருட்டு மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை ஒரு மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டது. பெரிதளவில் எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்படமால் அமைதியான முறையில் நிறைவுற்றது. மொத்தம் 72.81 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டகளில் ஆண்கள் அதிக அளவில் வாக்களித்து உள்ளனர். மொத்தம் உள்ள 6.28 கோடி வாக்காளர்களில் 4.57 கோடி பேர் மட்டும் வாக்களித்துள்ளனர், 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 4.57கோடி பேரில் 2.31 கோடி பெண் வாக்காளர்கள், 2.26 கோடி ஆண் வாக்காளர்கள், 1,419 திருநங்கைகள் வாக்களித்து உள்ளனர்” எனத் தெரிவித்தார்.