தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனாவின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மேலும் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தற்போதைக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கும்படி அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். மேலும் இந்த வழக்கை ஜூன் 11ஆம் தேதி விசாரிக்க உள்ளனர்.
மேலும், அரசியல் கட்சிகள், பொதுமக்கள், ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கும்படி தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் கரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்தும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதியில் ஊரடங்கை மேலும் கடுமையான முறையில் கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு வலியுறுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படுமா, இல்லையா என்பது குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கருதப்படுகிறது.