இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மனித குலத்திற்கே சவாலாக இருந்து வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள், காவல் மற்றும் வருவாய்த் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பினர் ஆகியோர் தங்கள் குடும்பத்தையே மறந்து, தன்னலம் கருதாமல் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்று கருதி தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இவர்களை, இறைவனுக்கு நிகராக நான் கருதுகிறேன்.
கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரிட்டவர்களின் உடல்களை, உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து தான் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், மருத்துவப் பணியில் ஈடுபட்டு நோய்த் தொற்றுக்கு ஆளாகி, தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பாக நடைபெற்ற ஓரிரு சம்பவங்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் அளிக்கின்றது.
தன்னலம் கருதாமல் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு, தங்கள் இன்னுயிரைத் துறப்பவர்களுக்கு தகுந்த மரியாதை அளிக்கும் விதத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும். மருத்துவர்கள் மற்றும் பிற களப் பணியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை" என்று முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்க! - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!