சென்னை: சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி. சிங்கின் முழு திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின் விழா மேடையில் முதலமைச்சர் பேசும் போது, "சென்னை - மண்டல் கமிஷன் பரிந்துரையை வி.பி.சிங் கொண்டு வந்த பொழுது ஆதிக்க சக்திகள் சிலர் அதை எதிர்த்து போராட்டங்களும் நடத்தினார்கள். அதே நேரத்தில், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் இதே கலைவாணர் அரங்கத்தில் ஒரு கவியரங்கம் நடத்தப்பட்டது. அதில், கருணாநிதி மிகுந்த கோபத்தோடு கவிதை வரிகளாக பேசினார்.
"மண்டல் கமிஷன் பரிந்துரையை மைய அரசு ஏற்றமைக்கு மகத்தான வெற்றி விழா. மனிதாபிமான வி.பி.சிங்கிற்கு நன்றியைத் தெரிவிக்கும் மனமார்ந்த திருவிழா" எனத் தொடங்கினார்.
"ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என அவன் உயர் சாதிக்கு மட்டும் தங்கத்தால் மூளை செய்து தலைக்குள் வைத்தானா மற்ற சாதிக்கெல்லாம் மண்டைக்குள் இருப்பது என்ன களிமண்ணா ? சுண்ணாம்பா?"
"கட்டை விரலோ, தலையோ இந்நாளில் எவரும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் கட்டை வேகும் சுடுகாட்டில்" எனக் கருணாநிதியின் கவிதை வரிகள் இன்றைக்கும் நினைவில் உள்ளது.
இப்போதும் கூட முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் பேசிய கவிதையின் வெப்பத்தை உணர முடிகிறது. இந்திய முழுமைக்கும் பரவியிருக்கின்ற சமூக நீதி குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நாங்கள். வி.பி.சிங் அவர்கள் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல, ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல இருந்தாலும் கூட ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீட்டைச் சாத்தியப்படுத்திக் காட்டியவர் அந்த கொள்கையில் மிகுந்த பிடிப்புடன் இருந்தவர்.
வி.பி.சிங் பிரதமர் பதவியில் 11 மாதங்கள் இருந்தாலும் கூட அவர் செய்த சாதனைகள் எண்ணற்றவை அதில்,
- பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குத் தொடக்கப்புள்ளி
- தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்குத் தொடக்கப்புள்ளி
- வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை உருவாக்கியது
- லோக்பால் சட்டத்துக்குத் தொடக்க முயற்சிகள்
- தேர்தல் சீர்திருத்தங்கள்
- அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்குப் பாரத ரத்னா விருது
- நாடாளுமன்றத்தின் நடுவே அண்ணல் அம்பேத்கர் படம்
- மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில்
- உழவர்கள் பிரச்சனையைத் தீர்க்க மூன்று குழுக்கள்
- டெல்லி குடிசைப்பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள்
- அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (MRP) அச்சிட உத்தரவு
- நுகர்வோர் பாதுகாப்பு
என அவர் செய்த சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சமூக நீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!