சென்னை: 'பசுமை புரட்சியின் தந்தை' என்றும் அழைக்கப்படும், இந்தியாவின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞாணி எம்.எஸ்.சுவாமிநாதன், வயது மூப்பு காரணமாக நேற்று (செப்.28) காலை 11.20 மணி அளவில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்ததில் வைக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பலர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில், அவரது உடலை நேற்று இரவு அவரது வீட்டில் இருந்து, தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல்வேறு தரப்பினர்கள் எம்.எஸ்.சுவாமிநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பொன் மொழிகள்!
முதலமைச்சர் அஞ்சலி: இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.29) காலை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், அவரது மகள் சௌமியா சுவாமிநாதனிடம் ஆறுதலும் தெரிவித்தார்.
அரசு மரியாதை: உலகம் போற்றும் விஞ்ஞானியாக, சுற்றுச்சூழல் - வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றியவர், பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன். அவரை கவுரவிக்கும் விதமாக, அவருக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்து இருந்தார்.
நாளை இறுதி சடங்கு: அதன்படி, எம்.எஸ்.சுமாமிநாதனின் இறுதிச் சடங்கு, நாளை காலை 10 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெறும் என்று அவரது மகள் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க எம்.எஸ்.சுவாமிநாதன் கூறிய அறிவுரைகள்!