தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், ஆவின் நிறுவனத்தின் சார்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லஸ்ஸி, மேங்கோ லஸ்ஸி, நீண்ட நாள்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் ஆவின் டீ மேட் பால் ஆகிய ஐந்து புதிய பொருள்களை அறிமுகம் செய்து வைத்தார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் மாநிலத்தில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது, ஆவின். மேலும், வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் முதலான பால் பொருள்களையும் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில், ஆவின் நிறுவனத்தின் சார்பில், கீழ்க்காணும் ஐந்து புதிய பொருட்களை முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.
தற்போதைய கரோனா வைரஸ் தொற்று காலகட்டத்தில் மக்களுக்குப் பயன்படும் வகையில் இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பொருள்களை சேர்த்து புதிய ஆவின் மோர் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஆவின் நிறுவனம் சாதாரண லஸ்ஸி மற்றும் புரோ பையோடிக் என்ற இரண்டு வகை லஸ்ஸிகளை விற்பனை செய்து வருகிறது. மேலும், சாக்லெட் சுவைமிகுந்த சாக்கோ லஸ்ஸி மற்றும் மாம்பழச் சுவையுடன் கூடிய மேங்கோ லஸ்ஸி என்ற இரண்டு புதிய லஸ்ஸிகளை தற்போது அறிமுகப்படுத்துகிறது.
நீண்ட நாட்கள் கெடாத வகையில் ஆவின் பால் அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்டு, பேக்குகளில் அடைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப் பால் பாக்கெட்டுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கத் தேவையில்லை. அறை வெப்பநிலையில்(Room Temperature) வைக்கும் பொழுது, 90 நாட்கள் வரை கெடாத வண்ணம் தயாரிக்கப்படுகிறது.
அதிக கொழுப்பு சத்துக் கொண்ட டீ மேட் என்ற புதிய பால் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் சண்முகம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலர் கே.கோபால்,, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம். வள்ளலார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.