சென்னையில் நடந்த தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மத்திய ஜவுளித் துறை மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். தொடர்ந்து இன்று மாலை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புத் திட்டங்கள், தமிழ்நாட்டில் அமையவுள்ள ஜவுளிப் பூங்கா குறித்து ஆலோசனை செய்தனர்.
மேலும், மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ், 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தி வரும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புத் திட்டங்கள், ஜவுளித்துறையின் கீழ் 10 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
நிறைவாக, 'மத்திய அரசு தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியை விரைந்து வழங்குதல்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் வழங்கினார்.
இந்தச் சந்திப்பின் போது கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலர் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க : ‘யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்’