நடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாளை இரவு ஏழு மணிக்கு நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, 'நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு டெல்லி செல்கிறேன். பதவியேற்பு விழாவிற்கு கூட்டணி கட்சி தலைவர்கள், பல முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேசுவதை தவறாக திரித்து பேசி எதிர்க்கட்சிகள் லாபம் அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் மீது பாஜகவினருக்கு அக்கறை உண்டு' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'காங்கிரஸ் இலங்கை தமிழர்களையும் இந்திய தமிழர்களையும் பாதுகாக்க தவறிவிட்டது. ஆனால், தமிழ்நாட்டு மக்களுக்காக பாஜக இருக்கிறது. இங்கு இருப்பவர்கள் தமிழ் தமிழ் என்று கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் பிரிவினை பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார். இந்த தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் அக்கறை கொண்டவர்கள் பாஜகவினர் மட்டுமே' என்று அவர் கூறினார்.