கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில், நாளை (ஏப்ரல் 26) முதல் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே பொதுமக்கள் சேவைக்குத் திறந்திருக்கும் என மாநில வங்கியாளர்கள் குழு அறிவித்துள்ளது. மேலும் சில அறிவுரைகளைப் பரிந்துரைகளை வங்கியாளர்கள் குழு வழங்கியுள்ளது.
அதன்படி, கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகள் அலுவலர்களின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுவது குறித்து முடிவு எடுக்கலாம். இணை நோய் பாதிப்பு உள்ள வங்கிப் பணியாளர்கள், கர்ப்பிணி பணியாளர்கள், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
மக்கள் கூட்டம் அதிகம் உள்ள வங்கிக் கிளைகளில் காவல் துறை உதவியை நாடலாம். வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டாலும் ஏடிஎம் எந்திரங்கள், பணம் செலுத்தும் இயந்திரங்கள் முறையாகப் பணியாற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். தொற்றுப் பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.