சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஏப்.19) இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 249 புதிய அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார். அறிவிப்பின் விவரங்கள் பின்வருமாறு...
- ராமேசுவரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு, அக்னி தீர்த்த படித்துறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி அரசு மானியம் வழங்கப்படும்.
- தமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் கிராம தெய்வங்களின் சுடுமண் சிற்பங்களைப் பாதுகாத்துச் சீரமைக்கும் பணி 6 திருக்கோயில்களில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- திருப்பைஞ்ஞீலி, பழையாறை, திண்டல், உள்ளிட்ட 15 திருக்கோயில்களில் ரூ. 25.98 கோடி மதிப்பீட்டில் ராஜ கோபுரங்கள் கட்டப்படும்.
- 19 திருக்கோயில்களில் புதிய திருத்தேர்கள் ரூ.11.83 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
- 53 திருக்கோயில்களில் உள்ள திருத்தேர்களுக்கு ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் திருத்தேர் பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்படும்.
- 46 திருக்கோயில்களின் திருக்குளங்கள் ரூ.25.94 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
- வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 3 நாட்கள் தைப்பூச விழாவிற்கு வருகை தரும் 10,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
- திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், அவர்களுக்கு புத்தாடைகளுடன் கட்டணமில்லா திருமணம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல் அத்திருமணங்களுக்கு 4 கிராம் பொன் தாலி திருக்கோயில் சார்பில் வழங்கப்படும்.
- தற்போது 15,000 திருக்கோயில்களில் நடைமுறையில் உள்ள ஒரு கால பூஜைத் திட்டம் மேலும் 2,000 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். இத்திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும்.
- ஒரு கால பூஜை திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகளின் மேற்படிப்பு நலன் கருதி ஆண்டுதோறும் 400 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட தனியாக ஒரு மைய நிதி ஏற்படுத்தப்படும். ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3,000-லிருந்து ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- குடும்ப ஓய்வூதியம் ரூ.1,500-லிருந்து ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கொடையாக ரூ.1,000 வழங்கப்படும்.
- திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்கள், பணி அனுபவம் பெற ஏதுவாக திருக்கோயில்களில் மூத்த அர்ச்சகர்களின் கீழ் பணி அனுபவம் பெற வாய்ப்பளித்து ரூ.6,000 மாத ஊக்கத் தொகை வழங்கப்படும்.
- ஓலைச் சுவடிகள் மற்றும் மூலிகை ஓவியங்கள் ஆய்வு மையம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்படும்.
- பக்தர்கள் நலன் கருதி பழனி-இடும்பன் மலை, அனுவாவி, திருக்கழுக்குன்றம், திருநீர்மலை ஆகிய மலைப் பகுதியில் அமைந்துள்ள 4 திருக்கோயில்களில் கம்பிவட ஊர்தி ரூ.66 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் நலனுக்காக ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி அமைக்கப்படும்.
- மயிலாப்பூர் அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
- திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் புதிய வெள்ளித்திருத்தேர் ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
- அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் 22 திருக்கோயில்களில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில் மாற்றுத்திறனாளிகள் கடலில் தீர்த்தமாட சிறப்பு நடைபாதை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் சார்பாக ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் உள்ளிட்ட மூன்று பசுக்கள் காப்பகங்கள் ரூ.4.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும்.
- சிறுவாபுரி பாலசுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், குமாரவயலூர் சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில், மருதமலை சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில், மதுரை கள்ளழகர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏதுவாக பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, ரூ.200 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- 7 திருக்கோயில்களில் ரூ.16.90 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இளைப்பாறும் மண்டபம் புதியதாகக் கட்டப்படும்.
- சென்னையிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரைச் செல்லும் பக்தர்களுக்கு திருத்தணியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இளைப்பாறும் மண்டபம் கட்டப்படும்.
- ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக, திருமலையில் பக்தர்களுக்கு கூடுதலாக தங்கும் விடுதி ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- திருக்கோயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் விரைவாகத் தரிசனம் செய்யும் பொருட்டு தனி வரிசை ஏற்படுத்தப்படும்.
- பக்தர்கள் பெருவாரியாக வருகை புரியும் திருவண்ணாமலை, சமயபுரம், பழனி, ஸ்ரீரங்கம் ஆகிய திருக்கோயில்களில் தினசரி ஒரு மணி நேரம் இடை நிறுத்த தரிசன வசதி ஏற்படுத்தப்படும்.
- இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப்பிரிவின் வாயிலாக முதற்கட்டமாக 108 அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டன. இவ்வாண்டு மேலும் 108 அரிய நூல்கள் மறு பதிப்பு செய்து வெளியிடப்படும்.
- ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தொன்மையான 84 திருக்கோயில்களுக்கு ரூ.149 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புனரமைக்கப்படும். இதற்கு ரூ.100 கோடி அரசு மானியமாக வழங்கப்படும்.
- திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலுடன் இணைந்த அம்மணி அம்மாள் மண்டபம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
- 745 திருக்கோயில்களில் ரூ.331 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
- கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்களில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மேலும் 100 திருக்கோயில்களுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
- நாமக்கல், அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் சார்பாக அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி புதிதாக தொடங்கப்படும்.
- கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்களின் நிர்வாகச் செலவினங்களுக்காக வழங்கப்படும் அரசு மானியத் தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.8 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
- புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாக செலவினத்திற்காக வழங்கப்படும் அரசு மானியத் தொகை ரூ.3 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.