சென்னை: பாரிமுனை மரைக்காயர் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமுமுக சார்பில் அப்பகுதியை சுற்றியுள்ள மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு 10 நாள்களுக்கு தேவையான நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.
மேலும் ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்எஸ்ஆர்எம் மகேப்பேறு மருத்துவமனைக்கு தேவையான 2 ஆக்சிஜன் சிலிண்டர்கள், முகக்கவசம், தலையணைகள் வழங்கப்பட்டன. மத்திய சென்னை மாவட்ட தலைவர் துறைமுகம் எம்.இ.மீரான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஐதர் அலி ஆகியோர் கலந்து கொண்டு பொருள்களை வழங்கினர்.
அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஐதர் அலி, “கரோனா பேரிடர் காலத்தில் ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை தமுமுக வடசென்னை மற்றும் மத்திய சென்னை நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு மதுகடை திறப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். இது ஏழை, எளிய மக்களுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்தும். கரோனா பேரிடர் காலத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறப்பது சிறப்புடையதாக இருக்காது. எங்களின் நோக்கம் மக்களை இந்த கரோனாவில் இருந்து காப்பாற்றுவதே” என்றார்.
இதையும் படிங்க: நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு!