சென்னை: பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மிக கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, வருகின்ற சனிக்கிழமை ஐப்பசி மாத பெளர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது. இந்நிலையில், பெளர்ணமியை முன்னிட்டு அதிகளவில் பக்தர்கள் வருகை இருக்கும் என்பதால், நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாகவும் 2 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெளர்ணமி அன்று எந்த விதமான தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படாது எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, அக்டோபர் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதாவது வரும் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்படும் ரயில், மறுநாள் மறுமார்க்கமாக ரயில் சென்னைக்கு கிளம்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு அக்.27ஆம் தேதி தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும், மேலும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 600 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அக்.28ஆம் தேதியன்று திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பின்னர் அக்.29ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 10 ஆயிரத்து 834 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமைக்கு மட்டும் சுமார் 10 ஆயிரத்து 874 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள், தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் கோலாகலமாக நடைபெற்ற சப்பர பவனி.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!